January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்குமாறு இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஆலோசனை

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்குமாறு அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு மண்ணில் அண்மைக் காலமாக பெற்ற தொடர் தோல்விகளின் காரணமாக அதிருப்தி அடைந்த ஒரு சில ரசிகர்கள் இலங்கை அணி வீரர்களை புறக்கணிக்குமாறு பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இவ்வாறான செயல்பாடுகளினால் இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணத்தில் விளையாடுகின்ற வீரர்களின் மன நிலையில் மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3 ஆவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியினை பதிவு செய்தது.

எனினும், ஐ.சி.சி.யின் ஒருநாள் சுப்பர் லீக்கில் இலங்கை அணி இறுதியாக விளையாடிய நான்கு தொடர்களில் தோல்வியை தழுவியது.

அத்துடன், இந்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய கடைசி டி-20 போட்டியில் தோல்வி என இலங்கை அணி ஐந்து தொடர்ச்சியான டி-20 தொடர்களை இழந்த பின்னர், இன்று (25) முதல் இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடவுள்ளது.

இதனிடையே, இலங்கை ரசிகர்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஊடாக வீரர்களை புறக்கணிக்கும் பிரசாரத்தை ஆரம்பித்ததை அடுத்து, சமூக ஊடகங்களில் இருந்து இலங்கை அணியை விலகி இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை வீரர்களுக்கான எனது அறிவுரை சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருங்கள். நீங்கள் அதைப் பயன்படுத்துவதால் முற்றிலும் பாதிக்கிறீர்கள். அதைக் கையாள ஒரே ஒரு வழி இருக்கிறது.அதை நீங்கள் பார்க்காமல் இருந்தால் போதும் என அவர் கூறினார்.

எனவே, எனது சிறந்த அறிவுரை என்னவென்றால், சில முட்டாள்கள் அங்கே என்ன நடக்கிறது என்று தங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறார்கள், உண்மையில் அவர்களுக்கு எதுவும் தெரியாது.

சமூக ஊடகங்களில் ஈடுபடாததற்கு வீரர்கள் தனது முன்மாதிரியை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் காலப் பகுதியில் தான் டுவிட்டரை இறுதியாக  பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.