January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜிம்னாஸ்டிக் தகுதிச் சுற்று: இலங்கை வீராங்கனை மில்காவுக்கு 78 ஆவது இடம்

Photo: National Olympic Committee of Sri Lanka

ஜப்பானில் நடைபெற்று வரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக் தகுதிச் சுற்றில் இலங்கை வீராங்கனை 78ஆவது இடத்தை பெற்றுக் கொண்டார்.

டோக்கியோ ஒலிம்பிக்கின் இரண்டாவது நாளான இன்று (25) காலை நடைபெற்ற பெண்களுக்கான கலைநய உடற்கலை சாகச இரண்டாவது பிரிவு தகுதிச் சுற்றில் இலங்கை வீராங்கனை மில்கா கெஹானி களமிறங்கினார்.

நான்கு சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியின் Vault பிரிவில் 13.366 புள்ளிகள் மட்டுமே பெற்றார். அதேபோல் Uneven bars பிரிவில் 10.866 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அவர், கடைசியாக நடைபெற்ற Balance beam பிரிவில் 11.266 புள்ளிகளையும் Floor பிரிவில் 10.300 புள்ளிகளையும் பெற்றார்.

மொத்தமாக அனைத்து பிரிவுகள் முடிவிலும் 45.798 புள்ளிகளை மில்கா கெஹானி பெற்றார். இதனால் 85 வீராங்கனைகள் பங்குபற்றிய தகுதிச் சுற்றில் மில்கா கெஹானி 78ஆவது இடம் பிடித்து தோல்வி அடைந்தார்.

முதல் 24 வீராங்கனைகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்பதால் மில்கா கெஹானி தகுதிச் சுற்றிலேயே வெளியேறினார்.

இந்த தகுதிச் சுற்றில் முதல் மூன்று இடங்களையும் ரஷ்யா ஒலிம்பிக் சங்கம் சார்பில் போட்டியிட்ட வீராங்கனைகள் பெற்றுக் கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, மில்காவுடன் போட்டியிட்ட இந்திய வீராங்கனை ப்ரனிதி நாயக் 42.565 புள்ளிகளை எடுத்து 79 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இது இவ்வாறிருக்க, டோக்கியோ ஒலிம்பிக்கின் மூன்றாவது நாளான நாளைய தினம் (26) இலங்கை சார்பில் ஜூடோ வீரர் சாமர நுவன் தர்மவர்தன தனது முதலாவது போட்டியில் களமிறங்கவுள்ளார்.

அதேபோல, ஆண்களுக்கான ஒற்றையர் பெட்மிண்டன் முதல் சுற்றின் இரண்டாவது போட்டியில் நிலூக கருணாரத்ன போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.