January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒருநாள் போட்டியில் இந்தியாவை 9 ஆண்டுகளுக்கு பிறகு வீழ்த்தியது இலங்கை

இந்தியாவுக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவை ஒருநாள் போட்டியொன்றில் 9 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணி சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி வரலாறு படைத்தது.

முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் வென்ற இந்திய அணி 2–0 என ஏற்கனவே ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய நிலையில், 3 ஆவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இதையடுத்து மழை குறிக்கீட்டின் காரணமாக போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டதையடுத்து இரு அணிகளுக்கும் 47 ஓவர்கள் நிர்ணயித்து மீண்டும் போட்டி ஆரம்பமாகியது.

இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்களில் இந்திய அணி 43.1 ஓவர்களில் 225 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 49 ஓட்டங்களையும், சஞ்சு சாம்சன் 46 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 40 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய, பிரவீன் ஜயவிக்ரம 3 விக்கெட்டுகளையும், துஷ்மன்த சமீர 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலங்கை அணிக்கு மழை குறிக்கீட்டு காரணமாக 227 வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி, 227 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ சிறப்பாக ஆடி 76 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். பானுக்க ராஜபக்‌ஷ 65 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 227 ஓட்டங்களை எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது.

இது 2012 ஜூலை மாதத்துக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி சொந்த மண்ணில் பெற்றுக் கொண்ட முதலாவது ஒருநாள் வெற்றியாகும்.

இந்தியா சார்பில் ராகுல் சாஹர் 3 விக்கெட்டுகளையும், சேத்தன் சகாரியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றியது.

ஆட்ட நாயகன் விருது அவிஷ்க பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்டது .தொடர் நாயகன் விருது சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது.

இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி-20 போட்டி 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.