January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வீரர்களை உற்சாகப்படுத்த ஜப்பான் சென்ற அமைச்சர் நாமல்

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் ஆரம்ப விழா நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ ஜப்பான் புறப்பட்டு சென்றுள்ளார்.

32 ஆவது கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை (23) நடைபெறவுள்ள எளிமையான ஆரம்ப விழாவுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.

எனினும் ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான இரண்டு விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் டோக்கியோவிலும், சப்போரோ, மியாகி மற்றும் புக்குஷிமா ஆகிய இடங்களிலும் நேற்று (21) ஆரம்பமாகின.

இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இலங்கையிலிருந்து 9 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இதில் பெரும்பாலான வீரர்கள் டோக்கியோவை சென்றடைந்து தத்தமது பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ டோக்கியோவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

இது தொடர்பில் அமைச்சர் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தவும், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் அதிகாரிகளை சந்திக்கவும் ஜப்பானிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும் எண்ணியுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிரா, தூதுக் குழுவின் பிரதித் தலைவரும் அமைச்சருமான கிட்டமுரா டொஷிஹிரோ ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

2021 ஜூலை 21 ஆம் திகதி டோக்கியோவுக்கு புறப்படும் முன்னர் அமைச்சரை சந்தித்து தமது வாழ்த்துகளை இவ்வாறு தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பின் போது, டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் ஆரம்ப விழா நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு விஜயம் செய்யும் அமைச்சர் ராஜபக்‌ஷவுக்கு, கிட்டமுரா தமது வாழ்த்துகளை தெரிவித்தார். அத்துடன், இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை அணியினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.