January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அபராதத்துடன் ஐ.சி.சி சுப்பர் லீக்கில் மேலும் ஒரு புள்ளியை இழந்தது இலங்கை

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பந்து வீசுவதற்கு தாமதித்தமையால் இலங்கை அணிக்கு போட்டி கட்டணத்தில் 20 வீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது  ஒருநாள் போட்டி கடந்த 20 ஆம் திகதி நடைபெற்றது.

இந்தப் போட்டியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் ஒரு ஓவரை வீசுவதற்கு தவறியுள்ளதாக ஐ.சி.சி குற்றம் சுமத்தியுள்ளது.

ஐ.சி.சி.யின் விதிமுறைப்படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் தங்களுடைய ஓவர்களை நிறைவு செய்ய தவறும் பட்சத்தில் ஒரு ஓவருக்கு 20 வீதம் போட்டிக் கட்டணத்தில் அபராதமாக அறவிடப்படும். அதன்படி, அணி வீரர்களின் போட்டிக்கட்டணத்தில் 20 வீதம் அபராதமாக அறவிடப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி, இலங்கை அணி விளையாடிய இந்தப் போட்டி, ஐ.சி.சி.யின் ஒருநாள் சுப்பர் லீக்கின் கீழ் இடம்பெறுவதால், குறித்த தொடரின் விதிமுறையின்படி, சுப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் இருந்து இலங்கை அணிக்கு ஒரு புள்ளி குறைக்கப்பட்டுள்ளது.

சுப்பர் லீக் விதிமுறைப்படி, ஒரு ஓவர் வீசுவதற்கு தவறுவதன் காரணமாக, அணியின் புள்ளிகளிலிருந்து ஒரு புள்ளி குறைக்கப்படும்.

அதன்படி, இலங்கை அணி தாமதமாக ஓவர்களை வீசிய குற்றச்சாட்டில், ஏற்கனவே 2 புள்ளிகளை இழந்துள்ளதுடன், தற்போது மேலும் ஒரு புள்ளியை இழந்துள்ளது. இதனால், புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன், 12வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதேவேளை, இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணையை போட்டி மத்தியஸ்தரான ரன்ஜன் மடுகல்ல மேற்கொண்ட நிலையில், குறித்த குற்றத்தை இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க ஏற்றுக் கொண்டார்.

எனவே, இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தேவையில்லை என ஐ.சி.சி சுட்டிக்காட்டியுள்ளது.

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி நாளை (23) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.