2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான உரிமையை அவுஸ்திரேலியா வென்றுள்ளது.
இதன் மூலம் மூன்றாவது முறையாகவும் ஒலிம்பிக் போட்டிகளை அவுஸ்திரேலியா நடத்த உள்ளது.
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் 2032 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஒ.சி) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
2032 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை எந்த நகரத்தில் நடத்துவது என்பது குறித்து இன்று (21)நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திலேயே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இதனை அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் உட்பட குயின்ஸ்லாந்து மாநிலம் முழுவதும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா அரசு இதற்காக பிரபல சர்வதேச கிரிக்கெட் மைதானமான காப்பா ஸ்டேடியம் உட்பட 32 இடங்களை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு பரிந்துரைத்துள்ளது.
2032 ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்துவதற்கு 4.5 பில்லியன் டொலர் பட்ஜெட் தேவைப்படும் என்று பிரிஸ்பேன் ஏலம் கணித்துள்ளது.
இதன்படி, ஒலிம்பிக் கமிட்டி 2.5 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க உள்ளது, மீதமுள்ளவை டிக்கெட் விற்பனை மற்றும் அனுசரணையாளர்கள் இடமிருந்து திரட்டப்பட உள்ளது.
2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை பெற இந்தியா, இந்தோனேஷியா, கத்தார், ஜெர்மனி , ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் முனைப்பு காட்டி இருந்தன.
எனினும் 72 வாக்குகளுடன் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை மூன்றாவது முறையாகவும் அவுஸ்திரேலியா வென்றுள்ளது.
அவுஸ்திரேலியா இதற்கு 1956 ம் ஆண்டு மெல்பேர்ன் நகரத்திலும், 2000 ம் ஆண்டு சிட்னியிலும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியுள்ளது.
இதேவேளை, 2024ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசிலும், 2028 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரிலும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி ஜப்பானின் தேசிய விளையாட்டு அரங்கில் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.