January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரண்டாவது போட்டியில் இலங்கையிடம் போராடி வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது

photo:BCCI_twitter

 

இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2:0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வரும் இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றிருந்த நிலையில்,செவ்வாய்க்கிழமை (20)இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை பெற்றது.

போட்டியில் இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சரித் ஹசலங்க அதிக பட்சமாக 65 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.மேலும், அவிஷ்க பெர்னாண்டோ 50 ஓட்டங்களையும் சாமிக கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில்,276 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.1 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

கடந்த போட்டியில் அசத்திய பிரித்வி ஷா (13), ஷிகர் தவான் (29), இஷான் கிஷன் (1) ஆகியோர் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 12 ஓவரில் 65 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்நிலையில்,4 வது விக்கெட்டுக்காக மணீஷ் பாண்டே உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார்.இந்த ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடி 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில்,மணீஷ் பாண்டே 37 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அரை சதமடித்த சூர்யகுமார் யாதவ் 53 ஓட்டங்களில் வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா டக் அவுட்டானார். குருணால் பாண்ட்யா 35 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார்.இதனால் 193 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

8 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தீபக் சாஹர்,புவனேஷ்வர் குமார் ஜோடி நிதானமாக ஆடியது.சாஹர் 66 பந்துகளில் அரை சதமடித்தார். இந்த ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

இறுதியில், இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 277 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்திய அணி சார்பில் இறுதி வரையில் ஆட்டமிழக்காது தீபக் சாஹர் 69 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் வனிது ஹசரங்க மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.