July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டோக்கியோ பாராலிம்பிக்கில் பங்கேற்க இலங்கையிலிருந்து ஒன்பது வீரர்கள் தகுதி

ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்க இலங்கையிலிருந்து ஒன்பது வீரர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேசிய பாராலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, இம்முறை பாராலிம்பிக்கில் இலங்கை சார்பாக 17 பேர் கொண்ட அணியொன்று பங்குபற்றும் என அந்த சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இம்முறை டோக்கியோ பாராலிம்பிக்கில் மெய்வல்லுனர், வில்வித்தை, டென்னிஸ் மற்றும் படகோட்டம் உள்ளிட்ட போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில், 2016 றியா பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரரான தினேஷ் பிரியன்த இரண்டாவது தடவையாக பாராலிம்பிக்கில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அதேபோல, விசேட தேவையுடைய ஆண்களுக்கான தனிநபர் துடுப்பு படகோட்ட போட்டியில் மகேஷ் ஜயகொடி முதல் தடவையாக பங்குபற்றவுள்ளார்.

இதன்மூலம், பாராலிம்பிக் துடுப்பு படகோட்டப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதலாவது இலங்கை வீரர் என்ற பெருமையையும் மகேஷ் ஜயகொடி பெற்றுக் கொண்டார்.

இதனிடையே, 2012 மற்றும் 2016 பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்திய காரணத்தினால் இம்முறை டோக்கியோ பாராலிம்பிக்கில் குறைந்தபட்சம் இரண்டு பதக்கங்களையாவது இலங்கை கைப்பற்றும் என தாம் நம்புவதாக தேசிய பாராலிம்பிக் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ராஜித அம்பேமொஹொட்டி தெரிவித்தார்.

பாராலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் இலங்கை முதல் பதக்கத்தை 2012 லண்டன் பாராலிம்பிக்கில் பெற்றுக் கொண்டது. ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பிரதீப் சன்ஞய வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.

அதனைத் தொடர்ந்து இறுதியாக நடைபெற்ற 2016 றியோ பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் வீரர் பிரியன்த தினேஷ் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இம்முறை டோக்கியோ பாராலிம்பிக்கில் பங்கு பற்றுகின்ற இலங்கை அணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி ஜப்பானுக்கு புறப்பட்டு செல்லவுள்ளது.

டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை பாராலிம்பிக் அணி விபரம் –

தினேஷ் பிரியன்த ஹேரத் – ஈட்டி எறிதல்

சமித துலான் – ஈட்டி எறிதல்

சம்பத் ஹெட்டி ஆராச்சி – ஈட்டி எறிதல்

குமுது பிரியன்கா – 100 மீட்டர், நீளம் பாய்தல்

சமன் சுபசிங்ஹ – 400 மீட்டர்

பாலித பண்டார – குண்டு எறிதல்

சம்பத் பண்டார – வில்வித்தை

மகேஷ்  ஜயகொடி – படகோட்டம்

டி.எஸ் தர்மசேன – கதிரை டென்னிஸ்