Photo: Sri Lanka Cricket
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ள அதேசமயம், ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் விளையாடுவதற்காக ஷிகர் தவான் தலைமையிலான இந்திய இளம் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, இலங்கை-இந்திய அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இலங்கை சார்பாக பானுக்க ராஜபக்ஷவிற்கு அறிமுகம் கிடைத்தது.மறுபுறத்தில் இந்தியா சார்பில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் அறிமுகத்தை பெற்றுக் கொண்டனர்.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்களை குவித்தது.
இலங்கை அணி சார்பில் சமிக்க கருணாரத்ன ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
இந்தியாவின் பந்து வீச்சில் யுஸ்வேந்திர சஹால், தீபக் சஹார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 263 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் களமிறங்கினர்.
தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, பிரித்வி ஷா அபாரமாக விளையாடி 24 பந்துகளில் 43 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய இஷான் கிஷன், தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்ற எந்தவித பயமுமின்றி அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்தார்.
தனது முதலாவது ஒருநாள் அரைச் சதத்தை பெற்றுக் கொண்ட அவர், 42 பந்துகளில் 59 ஓட்டங்களுடன் வெளியேறினார். இதில் 2 சிக்ஸர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும்.
அதனை அடுத்து மெல்ல மெல்ல வேகம் காட்ட தொடங்கிய அணித் தலைவர் ஷிகர் தவானும் தனது அரைச் சதத்தை நிறைவு செய்து, 86 ஓட்டங்களுடன் களத்தில் நிற்க, இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 263 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி பெற்றுக் கொண்ட ஒன்பதாவது தொடர்ச்சியான வெற்றி இதுவாகும்.
போட்டியின் ஆட்டநாயகன் விருது பிரித்வி ஷாவுக்கு வழங்கப்பட்டது.