October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையுடனான ஒருநாள் தொடரில் சாதனை படைக்கவுள்ள இந்திய வீரர்கள்

இலங்கைக்கு எதிராக இன்று (18) ஆரம்பமாகவுள்ள ஒருநாள் தொடரில் இந்தியாவின் ஒரு சில வீரர்கள் பல முக்கிய சாதனைகளை படைக்கவுள்ளார்கள்.

இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இன்று  கொழும்பு பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் இந்திய அணி வீரர்களான ஷிகர் தவான், சஞ்சு சாம்சன் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய வீரர்கள் முக்கிய சாதனைகளை படைக்கவுள்ளார்கள்.

இலங்கை தொடரில் இந்திய அணியின் தலைவராக செயல்பட போகும் அனுபவ வீரர் ஷிகர் தவான், இன்னும் 23 ஓட்டங்களை எடுத்தால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 6000 ஓட்டங்களை கடக்கவுள்ளதுடன், இந்த மைல்கல்லை எட்டும் 5 ஆவது இந்திய ஆரம்ப துப்பாட்ட வீரர் என்ற சாதனையையும் நிலை நாட்டுவார்.

அதேபோல, 35 ஆவது வயதில் இந்திய அணியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஷிகர் தவான், மிக அதிக வயதில் இந்திய அணியின் தலைவராக செயல்படவுள்ள முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுக் கொள்ளவுள்ளார்.

இதனிடையே, ஐ.பி.எல் தொடரில் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழும் சஞ்சு சாம்சன் 5 ஆண்டுகள் மற்றும் 364 நாட்கள் காத்திருப்புக்கு பின்னர் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறார்.

இதுதான் ஒரு இந்திய வீரரின் மிக நீண்ட காத்திருப்பு ஆகும். இவர் ஏற்கனவே இந்திய அணிக்காக டி-20 போட்டிகளில் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்திய அணியில் கடந்த சில தொடர்களாக வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் சுழல்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் இன்னும் 8 விக்கெட்டுகளை கைப்பற்றினால், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற மைல் கல்லை எட்டுவார்.

அதேபோல, வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இன்னும் 12 விக்கெட்டுகளை எடுத்தால் சர்வதேச ஒருநாள் போட்டியில் 150 விக்கெட்டுகளை எடுத்த வீரராக இடம்பிடிப்பார்.

இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி மிகவும் பலமான அணியாகத்தான் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதற்கு உதாரணம், சர்வதேச ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணியை கடைசியாக 1997 ஆம் ஆண்டில் தான் இலங்கை அணி வீழ்த்தியது.

தற்போது நடைபெறும் தொடரில் இலங்கை வெற்றி பெற்றால், 24 ஆண்டு கால இந்திய அணியின் சாதனை முறியடிக்கப்படும்.

அது மாத்திரமின்றி, இறுதியாக 2012 ஜூலை மாதத்துக்கு பிறகு இலங்கையுடன் நடைபெற்ற எந்தவொரு ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை சந்திக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.