January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய கிரிக்கெட் அணியுடன் விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிராக ஒருநாள், டி-20 தொடர்களில் விளையாடவுள்ள தசுன் ஷானக்க தலைமையிலான 25 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த போதிலும், இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் மற்றும் தரவு ஆய்வாளர் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட காரணத்தால் இந்தத் தொடர் ஐந்து நாட்கள் ஒத்திவைக்கப்பட்டு 18 ஆம் திகதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவை சந்திக்கவுள்ள 25 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இங்கிலாந்து தொடரில் விளையாடிய இலங்கை குழாத்தில் இடம்பெற்றிருந்த குசல் பெரேரா தோள்பட்டை உபாதை காரணமாகவும், வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ கணுக்கால் உபாதை காரணமாகவும் இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மத்திய வரிசை அதிரடி துடுப்பாட்ட வீரரான பானுக்க ராஜபக்‌ஷவுக்கு வைரஸ் தொற்று இல்லாதது உறுதி செய்யப்பட்டதன் பின்னர் இலங்கை அணியில் இடம் பெற்றுள்ளார்.

இவர்களுடன் லஹிரு குமார, கசுன் ராஜித போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் லஹிரு உதார, அஷேன் பண்டார போன்ற இளம் துடுப்பாட்ட வீரர்களும், இலங்கை அணியில் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை அணி விபரம் – தசுன் ஷானக்க (தலைவர்), தனன்ஞய டி சில்வா (பிரதித் தலைவர்), குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, பானுக்க ராஜபக்‌ஷ, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலன்க, வனிந்து ஹஸரங்க, அஷேன் பண்டார, மினோத் பானுக்க, லஹிரு உதார, ரமேஷ் மெண்டிஸ், பிரவீன் ஜயவிக்ரம, சாமிக்க கருணாரட்ன, பினுர பெர்னான்டோ, துஷ்மன்த சமீர, லக்‌ஷான் சந்தகன், அகில தனன்ஞய,தனன்ஞய லக்‌ஷான், இஷான் ஜயரட்ன, கசுன் ராஜித, லஹிரு குமார, இசுரு உதான, ஷிரான் பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ.