July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணத்தில் இலங்கை எதிர்கொள்ளும் அணிகள் அறிவிப்பு

photo: ICC Twitter

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஐ.சி.சி.யின் டி-20 உலகக் கிண்ணத் தொடருக்கான முதல் சுற்றில், குழு A யில் இலங்கை அணி இடம்பிடித்துள்ளது

இதன்படி, இலங்கை அணி, அயர்லாந்து, நமிபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த டி-20 உலகக் கிண்ணத் தொடர், கொரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இம்முறை டி-20 உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள அணிகளின் விபரங்கள் ஐ.சி.சி.யினால்  வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இலங்கை, பங்களாதேஷ், அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஓமான், நமிபியா, பப்புவா நியூகினியா உள்ளிட்ட 8 அணிகள் முதல் சுற்று ஆட்டத்தில் விளையாடுகின்றன.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சுப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். அதில், இந்தியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகளுடன் அந்த அணிகள் சேர்ந்து விளையாடும்.

இதன்படி, ஓமானில் நடைபெறவுள்ள முதல் சுற்றின் A குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் நமிபியா ஆகிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.

அதேநேரம், முதல் சுற்றில் B குழுவில் பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, பப்புவா நியூ கினியா மற்றும் ஓமான் அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், டி-20 உலகக் கிண்ணத் தொடரின் பிரதான சுற்றில் விளையாடுகின்ற அணிகளை டி-20 தரவரிசையின் அடிப்படையில் இரு பிரிவுகளாக ஐ.சி.சி பிரித்துள்ளது.

அதன்படி, குரூப் 1 இல் நடப்பு சம்பியன் மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் தகுதிச்சுற்றில் தேர்வாகும் இரு அணிகள் இடம்பெறுகின்றன.

அதேபோல, குரூப் 2 இல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளோடு, தகுதிச் சுற்றில் தேர்வாகும் அணிகளும் இடம்பெறுகின்றன.

ஐ.சி.சி.யின் ஏழாவது டி-20 உலகக் கிண்ணத் தொடர் டுபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் ஓமான் கிரிக்கெட் அகடமி ஆகிய மைதானங்களில் எதிர்வரும் அக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதல் சுற்று

குழு A – இலங்கை, அயர்லாந்து, நமிபியா, நெதர்லாந்து

குழு B – பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, பப்புவா நியூகினியா, ஓமான்

சுப்பர் 12

Group 1 – இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், A1, B2

Group 2 – இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ,B1, A2