Photo: BCCI Twitter
இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பான்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4 ஆம் திகதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் டர்ஹமில் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், ஜூலை 20ஆம் திகதி முதல் தொடங்கும் மூன்று நாள் பயிற்சி போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில், இங்கிலாந்தில் தங்கியுள்ள இந்திய வீரர்களில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 வீரர்களும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் இருவருக்கு இலேசான அறிகுறிகள் இருந்ததால் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பின்பு 10 நாட்கள் கழித்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒரு வீரருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மற்றொரு வீரர் தன்னுடைய 10 நாட்கள் தனிமைப்படுத்துதலை ஜூன் 18 ஆம் திகதி நிறைவு செய்கிறார். அப்போது மீண்டும் அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய வீரர் ரிஷப் பான்ட் என தெரிய வந்துள்ளது.
இவர் அண்மையில் இங்கிலாந்து – ஜேர்மனி அணிகளுக்கு இடையிலான யூரோ கிண்ண கால்பந்து போட்டியை நேரில் கண்டுகளித்துள்ளார். இதன்மூலம் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரரின் பெயர் பற்றி பி.சி.சி.ஐ இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.