January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தோள்பட்டை உபாதையினால் இந்திய தொடரை தவறவிடும் குசல் பெரேரா?

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா இந்திய அணிக்கெதிரான தொடரில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நிறைவுக்கு வந்த இங்கிலாந்து அணியுடனான தொடரின் போது குசல் பெரேரா தோள்பட்டை உபாதைக்குள்ளாகினார். எனினும், குறித்த உபாதையுடன் இங்கிலாந்து தொடர் முழுவதும் அவர் விளையாடியிருந்ததுடன், இலங்கை அணியின் தலைவராகவும் செயல்பட்டார்.

இந்த நிலையில், இலங்கை அணி வீரர்கள் தற்போது நாடு திரும்பி இந்திய தொடருக்காக தயாராகி வருகின்றனர். எனினும், தோள்பட்டை உபாதைக்குள்ளாகிய குசல் பெரேரா இன்னும் பூரண குணமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த மூன்று நாட்களாக கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறுகின்ற இலங்கை வீரர்களின் பயிற்சி முகாமிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

இதன் காரணமாக அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள இந்திய அணியுடனான தொடரில் அவர் இடம்பெறமாட்டார் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எது எவ்வாறாயினும், குசல் பெரேராவுக்கு நாளை (16)மேற்கொள்ளப்படும் இறுதி உடற்தகுதி பரிசோதனையின் பிறகு இதுதொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சுய தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்த பிறகு இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர், வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் ஆகிய இருவரும் நேற்றைய தினம் (14)இலங்கை வீரர்களின் பயிற்சி முகாமில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.