இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று (14) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணி, அண்மைக்காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதுடன், பின்னடைவுகளையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், இன்றைய தினம் இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்போது, இலங்கை கிரிக்கெட்டின் நீண்டகால திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், குறித்த சந்திப்பில் அரவிந்த டி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவினரும் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் ரொஷான் மஹானாம, முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார உள்ளிட்ட வீரர்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.