photo: West Indies Twitter
டி-20 கிரிக்கெட் போட்டியில் 14 ஆயிரம் ஓட்டங்கள் மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சென். லூசியாவில் நேற்று (12) நடைபெற்ற 3 ஆவது டி-20 போட்டியில் 6 விக்கெட்டுகளினால் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை எடுத்தது.
இதனையடுத்து 142 ஓட்டங்கள் என்ற இலக்கை 14.5 ஓவர்களில் எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
இதில் கிறிஸ் கெய்ல் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 38 பந்துகளில் 67 ஓட்டங்களை அதிரடியாக குவித்து அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
அத்துடன், டி-20 போட்டிகளில் 14 ஆயிரம் ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ் கெய்ல் படைத்துள்ளார்.
இதுவரை 431 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெய்ல், 14,038 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்று கிறிஸ் கெய்ல் பேசிய போது,
புள்ளி விபரங்களை பார்க்காதீர்கள். யுனிவர்ஸ் பாஸை மதிக்க வேண்டும். நான் துடுப்பாட்டத்தில் அண்மைக்காலமாக தடுமாறி வருவதை பலரும் அறிவார்கள்.எனவே இன்று இந்த இன்னிங்ஸை ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.
இதனிடையே, டி-20 போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்லுக்கு அடுத்தபடியாக கிரென் பொல்லார்ட் 10,836 ஓட்டங்களுடன் காணப்படுகிறார்.
இதனைத் தொடர்ந்து 3 ஆம் இடத்தில் சொஹைப் மலிக் 10,741 ஓட்டங்களுடனும், 4 ஆம் இடத்தில் டேவிட் வோர்னர் 10017 ஓட்டங்களுடனும், 5 ஆம் இடத்தில் விராட் கோலி 9,922 ஓட்டங்களுடனும் இருக்கின்றனர்.