இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக, இலங்கை U-19 அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் தம்மிக்க சுதர்ஷன நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதால், U-19 அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் தம்மிக்க சுதர்ஷன இந்திய அணிக்கு எதிரான தொடரில் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார்.
காலி ரிச்மண்ட் கல்லூரியின் பயிற்றுவிப்பாளராக செயல்பட்ட தம்மிக்க சுதர்ஷன, தற்போதைய காலப்பகுதியில் பாடசாலை கிரிக்கெட்டில் உள்ள மிகச் சிறந்த பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
இதன் காரணமாக அண்மையில் இலங்கை U-19 கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அத்துடன், இவர் இலங்கை கிரிக்கெட் உயர் செயல்திறன் மையத்தின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
எனவே, கிரான்ட் பிளவர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடையும் வரை இந்திய தொடருக்கான துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகும் வாய்ப்பு தம்மிக்க சுதர்ஷனவுக்கு கிடைத்துள்ளது.
சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர், எதிர்வரும் 18 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.