
Photo: EURO official Twitter
யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக இத்தாலி அணி சம்பியன் பட்டம் வென்றது.
16ஆவது யூரோ கிண்ண கால்பந்து சம்பியன்ஷிப் போட்டியின் விறுவிறுப்பான இறுதிப் போட்டி லண்டன், வெம்ப்லி மைதானத்தில் நடைபெற்றது.
இன்று (12) அதிகாலை நடைபெற்ற இப் போட்டியில் உலக தரவரிசையில் 7 ஆவது இடத்தில் உள்ள இத்தாலி, இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து வீரர் லூக் ஷா 2 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இத்தாலிக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67-வது நிமிடத்தில் இத்தாலி அணியின் லியனார்டோ போனுக்சி ஒரு கோல் அடித்தார். இறுதியில், இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. கூடுதல் நேரம் வழங்கியும் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷுட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்று சம்பியனாக தெரிவாகியது.
முன்னதாக 4 முறை உலக சம்பியனான இத்தாலி அணி இதற்கு முன்பு ஒரே ஒரு முறை யூரோ கிண்ணத்தை (1968 ஆம் ஆண்டு) வென்றுள்ளது. எனவே, 53 ஆண்டுகளுக்கு பிறகு யூரோ கிண்ணத்தை இத்தாலி அணி கைப்பற்றியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அதுமாத்திரமின்றி, இறுதியாக 2018 இல் நடைபெற்ற கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கே தகுதி பெறாது வெளியேற்றப்பட்ட இத்தாலி அணி, தோல்விகளில் இருந்து மீண்டு வந்து கால்பந்து உலகின் மிக முக்கியமான தொடர்களில் ஒன்றான யூரோ கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளது.