லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அவுஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி முதல் முறையாக சம்பியன் பட்டம் வென்றார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நேற்று (10) நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டியை எதிர்த்து செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிலிஸ்கோவா மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிலிஸ்கோவாவை, 6-4, 6-7, 6-3 என்ற செட்களில் போராடி வீழ்த்தி ஆஷ்லி பார்ட்டி முதல் தடவையாக விம்பிள்டன் சம்பியன் பட்டம் வென்றார்.
கடந்த 2012 ம் ஆண்டுக்குப் பின் விம்பிள்டன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 3 செட்கள் வரை போட்டி நடைபெற்றது இதுதான் முதல் முறையாகும்.
ஆஷ்லி பார்ட்டிக்கு இது 2 ஆவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டமாகும். இதற்கு முன் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் பட்டத்தை வென்ற பார்டி, தற்போது விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
அத்துடன், 50 ஆண்டுகளுக்கு பின்னர் விம்பிள்டனில் சம்பியனான முதலாவது அவுஸ்திரேலிய வீராங்கனையாக ஆஷ்லி பார்ட்டி சாதனை படைத்தார். முன்னாள் அவுஸ்திரேலிய வீராங்கனை இவோன் கூலாகொங் கோவ்லி விம்பிள்டனில் 1980 இல் கடைசியாக விம்பிள்டன் சம்பியன் பட்டத்தை வென்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அதுமாத்திரமின்றி, 2011 இல் விம்பிள்டனில் கனிஷ்ட சம்பியனான ஆஷ்லி பார்ட்டி, 10 வருடங்களின் பின்னர் விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பட்டத்தையும் வென்றெடுத்தார்.
25 வயதான ஆஷ்லி பார்ட்டி ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலங்களிலே கிரிக்கெட் வீராங்கனையாக செயல்பட்ட அவர், அவுஸ்திரேலியாவின் பிரபலமான கிரிக்கெட் தொடரான பிக்பாஸ் லீக் டி-20 போட்டிகளில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக இவர் விளையாடியதும் கவனிக்கத்தக்கது.
எனவே, கிரிக்கெட் வீராங்கனையாக இருந்து பின்னர் டென்னிஸ் உலகில் தடம்பதித்த அவர், உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையாக மாறி தனது 25 ஆவது வயதில் உலகின் மிகப் பிரதான கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் பட்டத்தை வெற்றி கொண்டு சாதனை படைத்துள்ளார்.