November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பி.சி.ஆர்.பரிசோதனையில் தேறிய இலங்கை வீரர்களுக்கு பயிற்சிகளில் ஈடுபட அனுமதி

இந்திய தொடரில் விளையாடவிருந்த அனைத்து இலங்கை வீரர்களுக்கும் இன்று (11) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் இன்றி இன்று மாலை அல்லது நாளை முதல் தமது பயிற்சிகளை ஆரம்பிக்கலாம் என இலங்கை கிரிக்கெட் சபை வைத்திய பிரிவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு பயணம் செய்த இலங்கை அணி, அந்நாட்டு அணியுடன் ஒருநாள் தொடர், டி20 தொடரில் விளையாடி கடந்த 6ஆம் திகதி நாடு திரும்பியது.

இலங்கை அணி நாடு திரும்பிய சில நாட்களில் இங்கிலாந்து அணியில் உள்ள 3 வீரர்கள் உட்பட்ட எழுவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது

இதையடுத்து, இலங்கை வீரர்களுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரான்ட் பிளவர், தரவு ஆய்வாளர் ஷிரன்த நிரோஷன ஆகியோருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் வீரர்களுக்கு சாதாரண தனிமைப்படுத்தும் காலத்தை மேலதிகமாக 3 நாட்கள் நீட்டித்து இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்தது. அதேபோல, இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் தொடர் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், கொழும்பில் பயிற்சிகளை பெற்று வந்த சந்துன் வீரக்கொடி, பானுக்க ராஜபக்‌ஷ, அசேல குணரத்ன, அஞ்சலோ பெரேரா, அஷான் பிரியன்ஞன் ஆகிய வீரர்களை பயிற்சிப் போட்டியில் விளையாடுவதற்காக நேற்று முன்தினம் மாலை தம்புள்ளைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே தம்புள்ளைக்கு அனுப்பப்பட்ட இலங்கை வீரர்களில் சந்துன் வீரக்கொடிக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அவருடன் நேரடித் தொடர்பில் இருந்து பயிற்சிகளில் பங்குபற்றிய பானுக்க ராஜபக்‌ஷ உள்ளிட்ட வீரர்களை தனிமைப்படுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்தது.

அதேபோல, அவர்களுடன் தொடர்பில் இருந்த 14 வீரர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேவேளை, இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய அனைத்து வீரர்களுக்கும் இன்று காலை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பயிற்சியாளர்கள் இன்றி பயிற்சிகளை மேற்கொள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் வைத்திய பிரிவு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, இன்று மாலை ஜிம் பயிற்சிகளையும், நாளை முதல் மைதானங்களுக்கு சென்று பயிற்சிகளையும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.