Photo: Copa America Twitter
கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் பிரேஸிலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆர்ஜென்டினா சம்பியன் பட்டம் வென்றது.
நட்சத்திர வீரர் லியொனல் மெஸ்ஸி தலைமையில் ஆர்ஜென்டினா அணி வெல்லும் முதல் சர்வதேச சம்பியன் பட்டம் இதுவாகும்.
47 ஆவது கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி பிரேஸிலின் ரியோடி ஜெனிரோ நகரில் உள்ள மாரக்கானா அரங்கில் நடைபெற்றது.
உலக கால்பந்து தரவரிசையில் 3 ஆவது இடத்திலுள்ள நெய்மரின் பிரேசில் அணி, 8 ஆவது இடத்திலுள்ள மெஸ்ஸியின் ஆர்ஜென்டினாவை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் முதலே கடுமையாக மோதிக் கொண்டன.
எனினும், போட்டியின் 22-வது நிமிடத்தில்,ஆர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். இதனால் முதல் பாதியில் ஆர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற 2 ஆவது பாதி ஆட்டத்தில் பிரேஸில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரேஸில் நட்சத்திர வீரர் நெய்மர் முதல் கோலுக்கு கடுமையாக முயற்சித்தார்.
எனினும், ஆர்ஜென்டினா அணி சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. எனினும், பிரேஸில் அணியால் கூடுதல் நேரத்திலும் கோல் அடித்து சமன் செய்ய முடியவில்லை.
இறுதியில், ஆர்ஜென்டீனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியன் ஆனது.
கோபா அமெரிக்கா கோப்பையை ஆர்ஜென்டீனா வெல்வது இது 15-வது முறை. ஆர்ஜென்டீனாவுக்கு லயோனல் மெஸ்ஸி பெற்று தரும் முதல் பெரிய சர்வதேச கோப்பை இது.
105 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோபா அமெரிக்கா கால்பந்து தொடரை ஆர்ஜென்டினா அணி 15 முறை வென்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் கோபா அமெரிக்கா கால்பந்து சம்பியன் பட்டத்தை அதிக முறை வென்ற அணி என்ற உருகுவேவின் சாதனையை ஆர்ஜென்டினா சமன் செய்தது.
அத்துடன், 1993 ஆம் ஆண்டு ஆர்ஜென்டினா அணி கோபா அமெரிக்க கால்பந்து கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் இப்போது மீண்டும் மெஸ்ஸி தலைமையில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் கிண்ணத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல, சுமார் 17 ஆண்டுகளாக ஆர்ஜென்டினா அணிக்காக ஆடிவரும் மெஸ்ஸி முதல் முறையாக சரவதேச போட்டியொன்றில் சம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.