இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் நிவ்காஸல் அணிக்கு எதிரான போட்டியில் மென்செஸ்டர் யுனைடட் அணி 4-1 எனும் கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது.
டொட்டென்ஹாமில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பாதிகளில் இரண்டு அணிகளின் வீரர்களும் சரிசமமாக விளையாடிய போதிலும் இறுதி நேரத்தில் மென்செஸ்டர் யுனைடட் அணி வீரர்களின் கை மோலோங்கியது.
போட்டியை சவாலாக ஆரம்பித்த நிவ்காஸல் அணிக்கு இரண்டாவது நிமிடத்தில் லுக் ஷாவ் முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார்.
23 ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் யுனைடட் அணி சார்பாக மெகியுரே கோலடிக்க போட்டி 1-1 என சம நிலையடைந்தது.
இரண்டாம் பாதியில் இரண்டு அணி வீரர்களும் கோலடிக்க கடுமையாக முயற்சித்த போதிலும் எந்தப் பயனும் கிட்டவில்லை.
போட்டி நிறைவை எட்டிய தருவாயில் புருனோ பெர்ணான்டஸ் 86 ஆவது நிமிடத்தில் கோலடிக்க மென்செஸ்டர் யுனைடட் அணி முன்னிலைப் பெற்றது.
மென்செஸ்டர் யுனைடட் அணி வீரர்களான வேன் பிஸ்கா 90 ஆவது நிமிடத்திலும், ரஷ்போர்ட் உபாதைக்கான மேலதிக நேரத்திலும் கோலடித்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
அதன்படி 4-1 என மென்செஸ்டர் யுனைடட் அணி வெற்றியை தனதாக்கியது.
இது பிரீமியர் லீக் கால்பந்தாட்டத்தில் இந்தப் பருவ காலத்தில் மென்செஸ்டர் யுனைடட் அணி பெற்ற இரண்டாவது வெற்றியாகும்.
அதற்கமைய 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று 14 ஆம் இடத்தில் மென்செஸ்டர் யுனைடட் அணி இருக்கிறது.