July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐசிசியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மனு சாவ்னி இராஜினாமா!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி மனு சாவ்னி உடன் அமுலாகும் வகையில் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளக விசாரணையொன்றுக்கு அமைய அவரது ஒழுங்கீனமான நடத்தை தொடர்பில் கண்டறியப்பட்டதையடுத்து அவருக்கு கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிக விடுமுறை வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், சர்வதேச  கிரிக்கட் பேரவையின் தலைவர் கிரெக் பார்க்லே தலைமையில் நேற்று இடம்பெற்ற அவசரச் கூட்டத்தின் போது, தனது பதவியை இராஜினாமா செய்வதாக மனு சாவ்னி அறிவித்துள்ளார்.

2019இல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக மனு சாவ்னி பதவியேற்றார். இவரது பதவிக்காலம் 2022 வரை இருந்தது.

சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப் இன் முன்னள் பிரதம நிறைவேற்று அதிகாரியான 52 வயதுடைய மனு சாவ்னி, ESPN மற்றும் STAR SPORTS தொலைக்காட்சிகளின் முகாமைத்துவப் பணிப்பாளராக சுமார் 17 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஜெப்ஃ அலெடைஸ், ஐசிசியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயற்படுவார் என சர்வதேச கிரிக்கெட் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது