July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா உறுதி

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் அண்மையில் இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற போட்டி தொடரை முடித்துவிட்டு இலங்கை அணி வீரர்களுடன் வருகை தந்து ஹோட்டலில் சுய தனிமைப்படுத்தப்பட்டார்.

எனினும், அவர் நாட்டை வந்தடைந்த பிறகு இலங்கை அணியின் எந்தவொரு வீரர்களையும் சந்திக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அனைவரையும் தம்மை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மறு அறிவித்தல் வரை எந்தவொரு நபரும் தமது அறைகளை விட்டு வெளியேற வேண்டாமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும், இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இவ்வாறு இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது இந்த தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

எனினும், இந்திய- இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும்  பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கிடைக்கின்ற முடிவுகளை பொறுத்து இந்திய தொடர் பற்றிய இறுதி அறிவிப்பு வெளியாகும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டி-20 தொடரின் போது போட்டி மத்தியஸ்தராக செயல்பட்ட பில் வைட்டிகேஷ் கொரோனாவினால் பாதிக்கப்பட்டார்.

அதன்பிறகு, இங்கிலாந்தின் அணி வீரர்கள் மூவர், அணி முகாமைத்துவ ஊழியர்கள் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.