November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நீண்டகால திட்டங்கள் இல்லாமையே இலங்கை அணியின் பின்னடைவுக்கு காரணம்’

நீண்டகாலமாக எந்தவொரு திட்டமும் இல்லாமல் செயல்பட்ட காரணத்தால் தான் இலங்கை அணி தற்போது பின்னடைவை சந்தித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலை குறித்து தனியார் வானொலி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்;

இலங்கை கிரிக்கெட் அணியில் எந்தவொரு முரண்பாடுகளும் கிடையாது. அதேபோல, நீண்டகால திட்டங்கள் முன்னெடுக்காத காரணத்தால் தான் இன்று இலங்கை அணி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவே, இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்வதற்கு அரவிந்த டி சில்வா தலைமையிலான கிரிக்கெட் தொழில்நுட்பக் குழு கடந்த சில மாதங்களாக மிகவும் அர்ப்பணிப்போடு செயல்பட்டார்கள்.

அண்மையில் தான் இலங்கை கிரிக்கெட் சபைக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். எனவே அவர்கள் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவார்கள்.

அதேபோல, இலங்கை அணியில் தற்போது விளையாடி வருகின்ற இளம் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடி அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள சிறிது காலம் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். எனவே எதிர்காலத்தில் நிச்சயம் எம்மால் வெற்றிகளை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இலங்கை கிரிக்கெட்டை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன், தேசிய அணிக்குள் இடம்பெற காத்திருக்கும் புதிய வீரர்களை இலக்காக கொண்டு புதிய திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, கிரிக்கெட் தொடர்பாக முறையான திட்டம் எதுவும் இல்லை என்றும், தற்போது இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே, அண்மைக்காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இலங்கை அணியின் தலைமைத்துவத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக்கவும், உப தலைவராக தனஞ்சய டி சில்வாவும் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.