July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை அணியின் புதிய தலைவராக தசுன் ஷானக்க நியமனம்

அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகின்ற இலங்கை அணியின் தலைமைத்துவத்தில் மீண்டும் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, இலங்கை ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் அணிகளின் புதிய தலைவராக துடுப்பாட்ட சகல துறை வீரரான தசுன் ஷானக்கவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் எதிர்வரும் 13, 16 மற்றும் 18 ஆம் திகதிகளில் ஒருநாள் சர்வதேச போட்டிகளும், எதிர்வரும் 21, 23 மற்றும் 25 ஆம் திகதிகளில் டி-20 போட்டிகளும் நடைபெறவுள்ளன.  மேற்படி ஆறு போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், அண்மையில் நிறைவுக்கு வந்த பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் நடைபெற்ற இருதரப்பு தொடர்களில் இலங்கை கிரிக்கெட் அணியினை ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் வழிநடத்திய குசல் பெரேரா தொடர்ச்சியாக மோசமான முடிவுகளை காட்டியதனால் அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய அணித் தலைவராக தசுன் ஷானக்கவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது

அதன்படி, இந்திய அணிக்கு எதிராக இம்மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் இருந்து இலங்கை ஒருநாள் மற்றும் டி-20 அணிகளின் தலைவராக தசுன் ஷானக்க செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அண்மையில் நிறைவுக்கு வந்த இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் தசுன் ஷானக்க துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தார்.

ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த தசுன் ஷானக்க அப்போது டி-20 அணிகள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியினை அவர்களது சொந்த மண்ணில் வைத்து 3-0 என டி-20 தொடரில் வைட்வொஷ் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.