டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்ப நிகழ்ச்சி அணி வகுப்பின் போது இலங்கை சார்பில் ஜூடோ வீரர் சாமர தர்மவர்தன, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கெஹானி ஆகியோர் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்கள் என தேசிய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்ப நிகழ்ச்சியில், முதலில் அனைத்து நாடுகளின் அணி வகுப்பு நடைபெறுவது மரபாகும். போட்டிகளில் பங்கேற்கும் பெரும்பாலான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நாடு வாரியாக விளையாட்டரங்கினுள் அணிவகுத்து நுழைவார்கள்.
ஒவ்வொரு அணியிலும், முதலில் வரும் வீரர் தங்கள் நாட்டின் தேசியக் கொடியை ஏந்தி செல்வார். இது அவர்களுக்கு கிடைக்கும் கௌரவமாக கருதப்படுகிறது.
அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்ப நிகழ்ச்சியில் இலங்கை சார்பில் குத்துச்சண்டை ஜூடோ வீரர் சாமர தர்மவர்தன, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கெஹானி ஆகியோர் தேசியக் கொடியை ஏந்திச் செல்வார்கள் என தேசிய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் இலங்கை இந்த முறை பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்காக ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பேரை தேசியக் கொடியை ஏந்தி செல்வதற்கு அனுமதி அளித்துள்ளது.
2016 ல் ரியோ டிஜெனீரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்ப நிகழ்ச்சியில் பெட்மிண்டன் வீரர் நிலூக கருணாரத்ன தேசியக் கொடியை ஏந்தி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, இம்முறை ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றுவதற்கு இலங்கையிலிருந்து ஒன்பது வீரர்கள் தகுதி பெற்றுக் கொண்டுள்ளனர்.