July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து அஞ்சலோ மெத்யூஸ் ஆலோசனை

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட வீரருமான அஞ்சலோ மெத்யூஸ், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் உத்தியோக பூர்வ முடிவினை அஞ்சலோ மெத்யூஸ் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியின் அனுபவமிக்க வீரர்களில் ஒருவரான அஞ்சலோ மெத்யூஸ், இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பெற்றாலும், அண்மைக் காலமாக ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களுக்கான குழாத்திலிருந்து தொடர்ச்சியாக நீக்கப்பட்டு வருகின்றார்.

குறிப்பாக, கடைசியாக இவர் விளையாடிய மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில், ஆட்ட நாயகன் விருதையும் வென்றிருந்தார்.

அதேநேரம், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி சார்பில் அதிக ஓட்டங்களை  குவித்த வீரராகவும் இடம்பிடித்தார்.

இதில் 2018 மற்றும் 2017 ம் ஆண்டுகளில் இவரது ஓட்ட சராசரி 50 இற்கும் அதிகமாக இருந்தது. எனினும், அண்மைக்காலமாக அவர் அடிக்கடி உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருவதால் உடற் தகுதியை நிரூபிப்பதில் தவறி வருகின்றார்.

எவ்வாறாயினும், உடற் தகுதியுடன் மீண்டும் அணிக்குள் நுழைந்து சிறப்பாக விளையாடியிருந்தார். எனினும், அண்மையில் நிறைவுக்கு வந்த பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள் அணிகளுடனான தொடர்களில் அஞ்சலோ மெத்யூஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டமை கேள்வியை எழுப்பியிருந்தது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக சர்ச்சையை ஏற்படுத்திவரும் வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தில், முன்னணி வீரர்களுடன், அஞ்சலோ மெத்யூஸும் கையெழுத்திடாமல் இருந்தார்.

தேர்வுப் புறக்கணிப்பு மற்றும் ஒப்பந்த விவகாரம் அஞ்சலோ மெத்யூஸின் திடீர் ஓய்வு முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

எது எவ்வாறாயினும், கிரிக்கெட்டிலிருந்து அஞ்சலோ மெத்யூஸ் ஓய்வு பெற்றால் தொடர்ச்சியாக தடுமாறி வருகின்ற இலங்கை அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை கொடுக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.