January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை அணியின் 25 பேர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான கிரிக்கெட் சுற்றுத் தொடர்களில் விளையாடுவதற்கான வீரர்கள் ஒப்பந்தத்தில், இலங்கை அணியின் வீரர்கள் 25 பேர் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை கிரிக்கெட் சபையின் தொழில்நுட்பக்குழு கடந்த மே மாதம் இலங்கை கிரிக்கெட் அணியின் 24 வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தினை அறிவித்திருந்தது.

வீரர்களுக்கான தரப்படுத்தலின்போது, பின்பற்றப்பட்ட நடைமுறை வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுப்பு தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்ட நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து நோக்கி பயணமானது.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட வீரர்கள் நேற்று மாலை நாடு திரும்பினர்.

இதனையடுத்து, கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திவதற்கு நேற்று இரவு 8 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இதில் இங்கிலாந்திலிருந்து திரும்பிய இலங்கை வீரர்களில், இந்திய தொடருக்காக இலங்கை கிரிக்கெட் சபை வழங்கிய சுற்றுலா ஒப்பந்தத்தில் 10 பேர் மாத்திரம் கையெழுத்திட்டுள்ளனர்.

மற்ற கிரிக்கெட் வீரர்கள் வருடாந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட ஒப்புக் கொண்டுள்ளனர், ஆனால் இந்த நேரத்தில் இலங்கை வீரர்களுக்கு சுற்றுலா ஒப்பந்தங்கள் மட்டுமே வழங்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அதேபோல, சுற்றுப்பயண ஒப்பந்தங்களில் கையெழுத்திடத் தவறுபவர்கள் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான தேர்வில் இருந்து விலக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்திய தொடருக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு இன்று காலை 8 மணி வரை இலங்கை வீரர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.

இதன்படி, இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் 25 வீரர்களும் 8 மணிக்கு முன் கையெழுத்திட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்தது.

இந்த நிலையில் வீரர்கள் அனைவரும் தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கும் காரணத்தினால் இந்த தொடருக்கான 20 பேர் அடங்கிய இலங்கை குழாம் நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.