டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு இலங்கையிலிருந்து ஒன்பது வீரர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேசிய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
32 ஆவது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடைபெறவிருந்தது.
ஆனால், உலகம் முழுவதும் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் நடைபெறவிருந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கொரோனா வைரஸுக்கு மத்தியிலும் ஒலிம்பிக் விளையாட்டு விழாவை நடத்துவதற்கு ஜப்பான் அரசும் சர்வதேச ஒலிம்பிக் சங்கமும் நடவடிக்கை எடுத்தது.
இதன்படி, டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா இம்மாதம் 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் 206 நாடுகளை சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீர, வீராங்கனைகள் பதக்கங்களை வெல்லும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கு இலங்கையிலிருந்து 9 வீரர்கள் தகுதிபெற்றுள்ள நிலையில், இலங்கை அணி எதிர்வரும் 15 ஆம் திகதி ஜப்பான் புறப்பட்டுச் செல்கின்றது.
இம்முறை இலங்கை சார்பில் ஒலிம்பிக் போட்டிக்கு 4 வீரர்களும், 5 வீராங்கனைகளும் தகுதி பெற்றுள்ளனர்.
அதேபோல, இலங்கை வீரர்களுடன் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 17 பேர் டோக்கியோ செல்லவுள்ளதாக தேசிய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் குதிரைச் சவாரி, ஜிம்னாஸ்டிக், துப்பாக்கி சுடுதல், பெட்மிண்டன், ஜுடோ, நீச்சல் மற்றும் மெய்வல்லுனர் ஆகிய 7 விளையாட்டுகளில் இலங்கை பங்கேற்கிறது.
இலங்கையின் நட்சத்திர பெட்மிண்டன் வீரரான நிலூக கருணாரத்ன, மூன்றாவது தடவையாக ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் களமிறங்கவுள்ளார்.
இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவரும், சுவீடனில் வசித்து வருகின்றவருமான மெதில்டா கார்ல்சன் குதிரைச் சவாரி போட்டியில் களமிறங்கவுள்ளார்.
ஒலிம்பிக் வரலாற்றில் குதிரைச் சவாரிப் போட்டியில் பங்குபற்றும் முதல் இலங்கையர் இவர் ஆவார்.
இதனிடையே, தேசிய கனிஷ்ட ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான 18 வயதுடைய மில்கா கெஹானி, பெண்களுக்கான கலைத்துவ ஜிம்னாஸ்டிக் போட்டியில் களமிறங்கவுள்ளார்.
இந்த நிலையில், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் டெஹானி எகொடவெலவும், ஆண்களுக்கான ஜுடோவில் சாமர நுவன் தர்மவர்தனவும் பங்குபற்றுகின்றனர்.
இவர்களுடன் நீச்சல் போட்டியில் இலங்கையின் நட்சத்திர நீச்சல் வீரரான மெத்யூ அபேசிங்க 100 மீட்டர் சாதாரண நீச்சல் போட்டியிலும், அனிக்காஹ் கபூர் பெண்களுக்கான 100 மீட்டர் வண்ணத்துப் பூச்சி நீச்சல் போட்டியிலும் களமிறங்கவுள்ளனர்.
இவர்கள் இருவரும் வைல்ட் கார்ட் முறையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இவர்களை விட மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டரில் யுபுன் அபேகோனும், பெண்களுக்கான 800 மீட்டரில் நிமாலி லியனஆராச்சியும் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.