January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கிரிக்கெட் 19 வயதுக்குட்பட்ட பயிற்சி முகாமில் யாழ்.வீரர்கள் இருவருக்கு வாய்ப்பு

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான பயிற்சி முகாமில் யாழ். மாவட்டத்திலிருந்து இரண்டு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வருடம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள U-19 ஆசிய கிண்ணம் மற்றும் 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள U-19 உலகக் கிண்ணத் தொடர்களுக்கான 30 வீரர்களை தெரிவு செய்யும் முகமாக விசேட பயிற்சி முகாமொன்றை நடத்த இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை குறித்த பயிற்சி முகாம் கண்டி – அஸ்கிரிய கிரிக்கெட் மைதானம் மற்றும் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இந்த பயிற்சி முகாமுக்கான தம்புள்ளை குழாத்தில் யாழ். மத்திய கல்லூரி வீரர் ஸ்ரீதரன் சாரங்கன் மற்றும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் ஏ. டெஷ்வின் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

வலது கை மித வேகப்பந்து வீச்சாளரான டெஷ்வின், மாகாணங்களுக்கு இடையிலான U-15 மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான U-15 அணிகளில் விளையாடியுள்ளார். அத்துடன், U-15 பாடசாலை அணியின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

அதேநேரம், ஸ்ரீதரன் சாரங்கன், யாழ். மத்திய கல்லூரி அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஆரம்ப காலங்களில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராக இருந்ததுடன், தற்போது ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடி வருகின்றார்.

இதனிடையே, இந்த பயிற்சி முகாமிற்காக நாடளாவிய ரீதியிலிருந்து மொத்தமாக 75 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த வீரர்கள் 2022ம் ஆண்டு U-19 உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதியுடையவர்களாவர்.

இதேநேரம், இந்த வீரர்கள் 15 வீரர்கள் கொண்ட குழாமாக பிரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த அணிகள் மேல் மாகாண வடக்கு, மேல் மாகாண தெற்கு, தம்புள்ளை, காலி மற்றும் கண்டி என பெயரிடப்பட்டுள்ளன. இந்த அணிகள் 4 டி-20 போட்டிகள் மற்றும் 10 ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ளனர்.

இந்த அனைத்து போட்டிகளும் கண்டி – அஸ்கிரிய கிரிக்கெட் மைதானம் மற்றும் பல்லேகலை மைதானங்களில் நடைபெறவுள்ளன.