January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்து அணியின் 3 வீரர்கள் உட்பட ஏழு பேருக்கு கொரோனா தொற்று

Photo: ICC Twitter

இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணியில் மூன்று வீரர்கள் உட்பட ஏழு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், மூன்று டி-20 போட்டிகளில் இலங்கை அணி விளையாடியது. இதில் டி-20 தொடரை 3-0 என்றும், ஒருநாள் தொடரை 2-0 என்றும் இங்கிலாந்து அணி வென்றது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியின் பிறகு இங்கிலாந்து வீரர்கள் மற்றும் அணியில் இடம்பெற்றிருந்த அனைவருக்கும் நேற்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் எதிர்பாராத விதமாக மூன்று வீரர்கள், முகாமைத்துவ குழுவின் 4 உறுப்பினர் உட்பட ஏழு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த ஏழு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அணியில் இருந்த அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இதனிடையே, இங்கிலாந்து வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியதன் காரணமாக நாளை மறுதினம் (08) ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு புதிய குழாம் ஒன்றை இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, ஒன்பது புதுமுக வீரர்களைக் கொண்ட இந்த அணியின் தலைவராக சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸின் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் குழாத்தில் 9 புதுமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் போது கை விரலில் காயத்துக்குள்ளான பென் ஸ்டோக்ஸ் தற்போது முழு உடற் தகுதியுடன் டெர்ஹம் அணிக்காக விளையாடி வருகின்றார்.

எனவே, பென் ஸ்டோக்ஸ் மார்ச் மாதத்துக்கு பின்னர் இங்கிலாந்து அணிக்காக மீண்டும் விளையாடவுள்ளார்.