இலங்கை கிரிக்கெட் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள வருடாந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருப்பதற்கு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனிடையே, இம்முறை ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள 24 வீரர்களுக்கும் கையெழுத்திடுவதற்கான கால அவகாசம் நாளை (07) காலை வரை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
எனினும், குறித்த 24 வீரர்களும், தமது சட்டத்தரணியான நிஷான் சிட்னி பிரேமரத்னவுடன் இது தொடர்பில் வட்ஸ்அப் மூலம் கலந்துரையாடியுள்ளனர்.
இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சம்பள ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருப்பதற்கு முடிவு செய்யப்பட்டதாக இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரொருவர் தெரிவித்தார்.
அரவிந்த டி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் சபையின் தொழில்நுட்ப குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம் நியாயமற்றது மற்றும் வெளிப்படையானதல்ல என சுட்டிக்காட்டி வீரர்கள் கையெழுத்திட மறுத்து வருகின்றனர்.
புதிய ஒப்பந்த விதிமுறைகளின்படி வீரர்களின் பங்களிப்பு, உடற் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
எனினும், தங்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், வீரர்களுக்கு புள்ளிகள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லை என தெரிவித்து ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.
இதன் காரணமாக, இங்கிலாந்து தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், கிரிக்கெட் சபை அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் இடையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் தற்காலிக இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இதனையடுத்து இங்கிலாந்து தொடருக்கு செல்வதற்கான ஒப்பந்தத்தில் மாத்திரம் கையெழுத்திடுவதற்கு இலங்கை வீரர்கள் சம்மதம் தெரிவித்திருந்தனர்.
இதன்படி, இங்கிலாந்து தொடர் நிறைவடைந்த பின்னர் ஒப்பந்தம் தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும், இங்கிலாந்து தொடரில் பங்கேற்ற இலங்கை அணி வீரர்கள் இன்று (06) இரவு நாட்டை வந்தடையவுள்ளனர்.
எனவே, வருடாந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்ற 14 வீரர்கள் இங்கிலாந்து தொடரில் விளையாடியிருந்த காரணத்தால் நாளைய தினம் இது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படும் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.