November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க நிமாலி லியன ஆராச்சி தகுதி

இலங்கையின் மெய்வல்லுனர் வீராங்கனை நிமாலி லியன ஆராச்சி 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றும் வாய்ப்பை உறுதி செய்துள்ளார் என தேசிய ஒலிம்பிக் சங்கம் இன்று (05) உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கையின் மெய்வல்லுனர் வீரர்களான யுபுன் அபேகோன் மற்றும் நிலானி ரத்னாயக்க ஆகிய இருவரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பை உறுதி செய்துள்ளனர் தேசிய ஒலிம்பிக் சங்கம் அறிவித்தது.

இதில் ஒலிம்பிக் வாய்ப்பை எதிர்பார்த்து நிலானி ரத்னாயக்க, அண்மையில் நடைபெற்ற 60 ஆவது இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தேசிய மெய்வல்லுனர் போட்டியில் பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டி பங்குபற்றியிருந்தார்.

எனினும், குறித்த போட்டியில் நிலானி வெண்கல பதக்கம் வென்ற போதிலும், அவரால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான புள்ளிகளை பெற்றுக் கொள்ள முடியாமல் போனது.

இதில் குறித்த போட்டி நடைபெறுவதற்கு முன்னர் பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டி ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக் பங்கீட்டு முறைக்கான பட்டியலில் முதல் 45 பேரில் கடைசி இடத்தில் நிலானி ரத்னாயக்க இடம்பெற்றிருந்தார். இதனால் அவருக்கு ஒலிம்பிக் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற வீரர்களின் இறுதிப் பட்டியலை சர்வதேச மெய்வல்லுனர் சங்கம் நேற்று முன்தினம வெளியிட்டிருந்தது.

இதில் பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் தடைதாண்டி ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக் பங்கீட்டு முறையில் முதல் 45 இடங்களில் உள்ள வீராங்கனைகளுக்கு மாத்திரம் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதன்படி, ஒலிம்பிக் பங்கீட்டு முறைக்கான புதிய பட்டியலில் நிலானிக்கு 46 ஆவது இடம் கிடைத்ததனால் ஒரு இடத்தினால் ஒலிம்பிக் செல்லும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.

இது இவ்வாறிருக்க, ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் உலகளாவிய பங்கீட்டு முறையில் இலங்கைக்கு வாய்ப்பு வழங்குமாறு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு உலக மெய்வல்லுனர் சங்கம் கடந்த சில தினங்களுக்கு முன் அங்கீகாரம் வழங்கியது.

இதற்கமைய டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 800 மீட்டர் போட்டிக்கு நிமாலி லியன ஆராச்சியின் பெயரை பரிந்துரைக்க இலங்கை மெய்வல்லுநர் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எனவே, தற்போது நிலானி ரத்னாயக்கவுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் இலங்கைக்கு கிடைத்துள்ள ஒலிம்பிக் பங்கீட்டின் அடிப்படையில் நிமாலி லியன ஆராச்சி ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான 800 மீட்டரில் முன்னாள் ஆசிய மெய்வல்லுனர் சம்பியனான நிமாலி, அண்மையில் நிறைவுக்கு வந்த 60 ஆவது இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தேசிய மெய்வல்லுனர் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.