January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பானுக ராஜபக்‌ஷவுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட போட்டித் தடை!

இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்‌ஷவுக்கு ஒரு வருட போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

சமூக வலைத்தளம் மற்றும் ஏனைய ஊடகங்களுக்கு அண்மையில் வழங்கியிருந்த நேர்காணல்களின் போது, இலங்கை கிரிக்கெட் சபையுடனான 2019/20 வருடத்துக்கான ஒப்பந்தத்தை பானுக ராஜபக்‌ஷ மீறியுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பானுக ராஜபக்‌ஷவிற்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பதற்கு இரண்டு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஒரு வருட போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவுடன் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் தொடரினை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள 13 பேர் கொண்ட முதல் கட்ட இலங்கை குழாமில் பானுக்க ராஜபக்‌ஷ இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதன்படி, கொவிட்-19  கட்டுப்பாட்டு வலய முறையின் கீழான பயிற்சிகளில் 13 பேர் கொண்ட குழாமுடன் நாளை (06)அவர் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.