January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லங்கா பிரீமியர் லீக்கில் பங்கேற்க 11 நாடுகளின் வீரர்கள் விருப்பம்

இந்த ஆண்டு நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் டி-20 தொடருக்காக 11 நாடுகளை சேர்ந்த 52 வீரர்கள் தமது பெயர்களை பதிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, அவுஸ்திரேலியாவை சேர்ந்த 5 வீரர்களும், பங்களாதேஷைச் சேர்ந்த 7 வீரர்களும், பாகிஸ்தானை சேர்ந்த 8 வீரர்களும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 8 வீரர்களும், தென்னாபிரிக்காவை 8 சேர்ந்த வீரர்களும், மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த 9 வீரர்களும் தமது பெயர்களை இம்முறை லங்கா பிரீமியர் லீக்கில் பதிவு செய்துள்ளனர்.

அந்த வகையில் ஐ.சி.சி தரவரிசைப்படி உலகின் முதல்நிலை சகல துறை வீரரான பங்களாதேஷ் அணியின் சகிப் அல் ஹசன், அவுஸ்திரேலிய அணியின் சகல துறை வீரர்களான பென் கட்டின், ஜேம்ஸ் போல்க்னர் மற்றும் தென்னாபிரிக்க அணியின் ஒருநாள் மற்றும் டி-20 அணித் தலைவர் டெம்பா பவுமா மற்றும் டி-20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தப்ரைஸ் சம்ஷி ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.

இதுதவிர, பங்களாதேஷ் அணியின் தமீம் இக்பால், மஹமுதுல்லா ரியாத், மேற்கிந்திய தீவுகளின் நிகொலஸ் பூரான், நியூசிலாந்தின் மிச்செல் மெக்லனகன், அவுஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா உள்ளிட்ட பல முன்னணி வீரர்களும் லங்கா பிரீமியர் லீக் போட்டிகளுக்காக தமது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

அத்துடன், கடந்த வருடம் கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடிய இந்தியாவின் இர்பான் பதானும், அவரது சகோதரர் யூசுப் பதானும் இம்முறை லங்கா பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்கு தமது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரர் பிரெண்டன் டெய்லர், நேபாளத்தைச் சேர்ந்த சந்தீப் லாமிச்சேன், அமெரிக்காவின் அலி கான் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அத்தியாயம் இம்மாதம் 30 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

போட்டிகள் அனைத்தும் கடந்த ஆண்டை போல ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்‌ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இலங்கை கிரிக்கெட் சபை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.