ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கூட டி-20 உலகக் கிண்ண போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுவிட்டது.ஆனால் இலங்கை அணி டி-20 போட்டியின் தகுதி சுற்றில் விளையாடும் நிலையில் தான் தற்போதும் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
அண்மையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க, ‘இந்திய கிரிக்கெட் சபை , தங்களின் சிறந்த அணியை இங்கிலாந்து தொடருக்கு அனுப்பி வைத்துவிட்டு, பலவீனமான அணியை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகவும் 2-ம் தர இந்திய அணி இலங்கை வந்திருப்பது இலங்கை கிரிக்கெட் அணிக்கு அவமானத்தைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? என பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சனலில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இதன்போது, ‘அர்ஜுன ரணதுங்க கூறியது முற்றிலும் உண்மைதான்.இலங்கைக்கு சென்றுள்ளது முழுமையான இந்திய அணி இல்லை.
விராட் கோலி, பும்ரா, ரோஹித் சர்மா, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் இல்லை தான்.ஆனால், இலங்கை சென்றுள்ள இந்திய அணியை பார்த்தால் ‘பி’ டீம் போல் இருக்கிறது? என குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இப்போதுள்ள இலங்கை அணியின் ஃபோர்ம் குறித்து கூற வேண்டுமானால் இன்னும் டி-20 உலக கிண்ண போட்டியின் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டிய நிலையில் தான் இலங்கை அணி இருப்பதாக ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், ஆப்கானிஸ்தான் அணி கூட தகுதிச் சுற்றில் விளையாடவில்லை.நேரடியாகவே இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. ஆனால் தற்போதும் ஒரு தடுமாற்றம் அடைந்த அணியாகவே இலங்கை அணி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் உத்தேச 11 வீரர்கள் கொண்ட ஒருநாள் அணியை எடுத்துக் கொண்டால் மொத்தமாக 471 போட்டிகளில் விளையாடியுள்ளது.ஆனால், இலங்கை அணியில் உள்ள வீரர்கள் அனைவரையும் சேர்த்தால் கூட இத்தனை போட்டிகளில் விளையாடியிருப்பார்களா ? என்பது கேள்விக்குறியே.
ஆதலால், இலங்கை அணி தன்னைத்தானே உற்று நோக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும், அதுதான் நேர்மையானதாக இருக்கும் எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.