July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2023 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்;இலங்கை அணியின் போட்டி அட்டவணை வெளியானது

ஐ.சி.சி.யின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில் இலங்கை அணி 13 டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஆரம்பமாகிய ஐ.சி.சி.யின் அங்குரார்ப்பண டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர், 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இந்த நிலையில், தற்போது 2021-2023 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

டெஸ்ட் விளையாடும் 9 நாடுகளும் தலா 6 தொடர்களில் ஆட வேண்டும்.ஒவ்வொரு அணியும் மூன்று முறை உள்நாட்டிலும், மூன்று முறை வெளிநாட்டிலும் விளையாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெற்று அதிக புள்ளிகள் பெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

கிக்கெட் உலகின் ‘BIG 3’ என அழைக்கப்படுகின்ற இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர்களை தங்களுக்கு இடையே ஆட மற்ற அணிகளுக்கு 3 டெஸ்ட்கள் கொண்ட தொடர் அல்லது 2 டெஸ்ட்கள் கொண்ட தொடர்கள் வழங்கப்பட்டுள்ளமையால் எப்படி அந்த அணிகள் இறுதிக்கு முன்னேற முடியும் என்ற கேள்வி எழுகிறது.

இதனிடையே, இரண்டாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இங்கிலாந்து 21 டெஸ்ட் போட்டிகளிலும், இந்தியா 19 டெஸ்ட் போட்டிகளிலும், அவுஸ்திரேலியா 18 டெஸ்ட் போட்டிகளிலும், தென்னாபிரிக்கா 15 போட்டிகளிலும் விளையாடவுள்ளன.

நடப்பு டெஸ்ட் உலக சம்பியனான நியூசிலாந்து அணி 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடும். மேற்கிந்திய தீவுகள், இலங்கை அணிகள் 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடும்.

அதேபோல, பாகிஸ்தான் அணி 14 டெஸ்ட் போட்டிகளில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் விளையாடும். இதனிடையே, பங்களாதேஷ் அணிக்கு 6 தொடர்கள் இருந்தாலும் ஒரு தொடருக்கு 2 டெஸ்ட் போட்டிகள்தான் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும், இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் 4 ஆம் திகதி ஆரம்பமாகிறது.இதன் மூலம் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2 ஆவது அத்தியாயம் ஆரம்பமாகின்றன.

இந்த நிலையில், இலங்கை அணி விளையாடவுன்ள முதலாவது டெஸ்ட் தொடர் இவ்வருடம் டிசம்பர் மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.

இதனையடுத்து அடுத்த வருட முற்பகுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி விளையாடவுள்ளது. இந்தத் தொடர் ஐ.பி.எல் தொடருக்கு முன் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜூன் மாதம் அவுஸ்திரேலிய அணியும், ஜூலை மாதம் பாகிஸ்தான் அணியும் இலங்கை வந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இதனிடையே, மேற்கிந்திய தீவுகள் அணி அக்டோபர் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகளை  கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும். இலங்கை அணி தனது சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் கடைசி டெஸ்ட் தொடர் இதுவாகும்.

இதேவேளை, அடுத்த ஆண்டு இறுதியில் நியூசிலாந்து செல்லும் இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. அந்த தொடர் தான் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணி விளையாடும் கடைசி டெஸ்ட்  தொடராகும்.