அரவிந்த, முரளிதரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் விளையாடிய இலங்கை அணிக்கு தற்போது என்ன நடந்துள்ளது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி-20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகின்றது.
முன்னதாக நடைபெற்ற டி-20 தொடரை முழுமையாக இழந்த இலங்கை அணி, தற்போது நடைபெற்று வருகின்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு போட்டி எஞ்சியிருக்க முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது.
இலங்கை அணியின் இந்த மோசமான செயல்பாடு குறித்து பல முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் தமது அதிருப்தியினையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன், அரவிந்த டி சில்வா, முத்தையா முரளிதரன் போன்ற நட்சத்திர ஜாம்பவான்கள் விளையாடிய இலங்கை அணிக்கு தற்போது என்ன நடந்துள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
அரவிந்த டி சில்வா, அர்ஜுன ரணதுங்க, சமிந்த வாஸ், முரளிதரன், மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார போன்ற இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் அவர்கள் விளையாடிய காலத்தில் எந்தவொரு உலக பதினொருவர் அணிக்கும் விளையாடுவார்கள். ஆனால் தற்போதுள்ள இலங்கை அணிக்கு என்ன நடந்துள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற டி-20 தொடரை இழந்த இலங்கை அணி, தொடர்ச்சியாக ஐந்தாவது தொடர் தோல்வியைச் சந்தித்தது. மேலும், ஒருநாள் தொடரில் இன்னுமொரு போட்டி எஞ்சியிருக்க ஒருநாள் தொடரையும் இழந்து விட்டது.
இதில் கடந்த 2018 அக்டோபர் முதல் 10 டி-20 தொடர்களில் இலங்கை அணி விளையாடியுள்ளது. இதில் ஒன்றில் மாத்திரம் வெற்றி கொண்ட இலங்கை அணி, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிராக தலா 2 தொடர்களில் தோல்வியை தழுவியது.
அத்துடன், அவுஸ்திரேலியா, இந்தியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற டி-20 தொடர்களையும் இலங்கை அணி முழுமையாக இழந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்றும் 3 ஆவது ஒருநாள் போட்டி 4 ஆம் திகதி பிரிஸ்டலில் நடைபெறவுள்ளது.
எனவே, இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணிக்கு வெற்றியை பதிவு செய்வதற்கான கடைசி வாய்ப்பு இதுவாகும்.