Photo: ICC Twitter
ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக போட்டிகளில் தோல்விகளை சந்தித்த அணிகளின் பட்டியலில் இந்தியாவை முந்தி இலங்கை முதலிடத்திற்கு வந்துள்ளது.
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 241 ஓட்டங்களை எடுத்தது.
இவங்கை அணி சார்பில் தனன்ஜய டி சில்வா சிறப்பாக ஆடி 91 ஓட்டங்களைக் குவித்து சதமடிக்கும் வாய்ப்பை தறவிட்டார். மறுபுறத்தில் தசுன் ஷhனக்க 47 ஓட்டங்களுடன் வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இங்கிலாந்து அணி சார்பில் சாம் கரன் 5 விக்கெட்டுக்களையும், டேவிட் வில்லி 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 242 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜொன்னி பேர்ஸ்டோவ் 29 ஓட்டங்களில் வெளியேறினார். ஜேசன் ராய் அரைச் சதமடித்து 60 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜோ ரூட்டுடன், அணித் தலைவர் ஒயின் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், இங்கிலாந்து அணி 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 244 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜோ ரூட் 68 ஓட்டங்களுடனும், மோர்கன் 75 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என ஒருநாள் தொடரை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது சாம் கரனுக்கு அளிக்கப்பட்டது.
இதனிடையே, இங்கிலாந்துடனான தோல்வி மூலமாக இலங்கை கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக மாறியது .
இதுவரைக்குமான ஒருநாள் போட்டிகளில் அதிக தோல்விகள் தழுவிய அணியாக இந்திய அணி காணப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி 993 போட்டிகளில் பங்கெடுத்து 427 தோல்விகளை பெற்றுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று தமது 860 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய இலங்கை அணி 428 ஆவது தோல்வியை பெற்றுக்கொண்டு தோல்விப் பட்டியலில் முதலிடத்திற்கு வந்துள்ளது.
மேலும், ஐசிசி 2023 உலகக் கிண்ண சுப்பர் லீக் கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி 8 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் கடைசியாக உள்ள 13ஆவது இடத்தில் இருக்கின்றது.
இதேவேளை, இங்கிலாந்து அணியுடனான இலங்கையின் கடைசி மற்றும் 3 ஆவது ஒருநாள் போட்டி 4 ஆம் திகதி பிரிஸ்டலில் நடைபெறவுள்ளது.