July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கேல் ரத்னா’ விருதுக்கு மிதாலி ராஜ், அஸ்வின் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் மிதாலி ராஜ் ஆகிய இருவரின் பெயர்களை பி.சி.சி.ஐ பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவின் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் விதமாக, ஆண்டுதோறும் அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் துரோணாச்சார்யா விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

அதன்படி, கடந்த 2017 – 2020 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு விருது பெற தகுதியுடையவர்களின் பெயர்களை பரிந்துரை செய்யுமாறு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

அதன்படி, பல்வேறு விளையாட்டுகளின் சம்மேளனமும் வீர, வீராங்கனைகளின் பெயர்களை பரிந்துரை செய்து வருகிறது.

அந்த வகையில், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் மிதாலி ராஜ் ஆகிய இருவரினதும் பெயர்களை பி.சி.சி.ஐ பரிந்துரை செய்துள்ளது.

ஏற்கெனவே அர்ஜுனா விருதை வென்றுள்ள 34 வயதான ரவிச்சந்திரன் அஸ்வின், 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 413 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளையும், டி 20 ஆட்டங்களில் 52 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இதேபோல, தமிழகத்தை பூர்விகமாக கொண்ட துரைராஜ் லீலா ராஜ் தம்பதியின் மகளான மிதாலி ராஜ், இந்திய அணிக்காக 215 ஒருநாள், 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

38 வயதான மிதாலி ராஜ், கடந்த வாரம் சர்வதேச கிரிக்கெட்டில் 22 வருடங்களை நிறைவு செய்தார். பெண்கள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்களின் பட்டியலில் மிதாலி ராஜ், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டங்களை  குவித்து முதலிடத்தில் உள்ளார்.

இதனிடையே, அர்ஜுனா விருதுக்காக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல், ஷிகர் தவான் ஆகியோரின் பெயர்களை பி.சி.சி.ஐ பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.