இந்திய அணிக்கெதிராக நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் மேலதிகமாக பதின் மூன்று வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி-20 தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 13 ஆம் திகதி ஆர். பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த தொடரில் பங்கேற்கவுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி கடந்த 28 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது.
இந்த நிலையில், இந்திய தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் முதற்கட்ட குழாத்துக்கான 13 வீரர்கள், கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள கொவிட்-19 கட்டுப்பாட்டு வளையத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
குறித்த 13 வீரர்களும், வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தை நிராகரித்து வரும் 40 வீரர்களில் இடம்பெறாத வீரர்கள் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கொவிட்-19 கட்டுப்பாட்டு வளையத்தில் உள்வாங்கப்பட்டுள்ள வீரர்கள் அனைவரும், கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ஒருவேளை இங்கிலாந்து தொடரில் பங்கேற்ற வீரர்கள் இந்திய தொடரில் விளையாடுவதைப் புறக்கணித்தால் குறித்த 13 வீரர்களுக்கும் இந்திய தொடரில் வாய்ப்பு வழங்குவதற்கு தேர்வாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.
அதன்படி, அஷான் பிரியஞ்சன், அசேல குணரத்ன, அஞ்சலோ பெரேரா, சந்துன் வீரக்கொடி, ரொஷேன் சில்வா, பிரபாத் ஜயசூரிய, லஹிரு மதுஷங்க, லஹிரு கமகே, மாலிந்த புஷ்பகுமார,ஜெப்ரி வெண்டர்சே உள்ளிட்ட வீரர்கள் இந்திய தொடருக்கான முதற்கட்ட குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல, சிரேஷ்ட வீரர்களான மிலிந்த சிறிவர்தன, டில்ஷான் முனவீர, சத்துரங்க டி சில்வா ஆகிய வீரர்களும் இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இலங்கை அணியின் அனுபவ வீரர்களான அஞ்சலோ மெதியூஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் இந்த உயிரியல் பாதுகாப்பு வளையத்தில் இணைக்கப்படவில்லை.
எனவே, இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் விளையாடமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.