photo: ICC Twitter
ஐ.சி.சி.யின் டி-20 பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை வீரர் வனிந்து ஹஸரங்க ஐந்தாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
மூவகை கிரிக்கெட் போட்டிகளுக்குமான புதிய வீரர்கள் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டிருக்கின்றது.
அதன்படி, டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவரான கேன் வில்லியம்சன் ஸ்டீவ் ஸ்மித்தினை பின்தள்ளி 901 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றிருக்கின்றார்.
மறுமுனையில், இரண்டாம் இடத்திலுள்ள ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் காணப்பட, அவுஸ்திரேலிய அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரரான மார்னஸ் லபச்சேனே 878 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் காணப்படுகின்றார்.
இதேநேரம், நியூசிலாந்து ஐ.சி.சி இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பினை வெற்றி கொள்வதற்கு காரணமாக இருந்த முக்கிய வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேமிசன், டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் 30 இடங்கள் முன்னேறி 13 ஆவது இடத்தினை பெற்றிருக்கின்றார்.
இதேவேளை, டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்தும் நீடிக்கின்றார்.
இதனிடையே, டி-20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க ஐந்தாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அத்துடன், இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையில் அண்மையில் நிறைவுக்கு வந்த டி-20 தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய துஷ்மன்த சமீரவும் 41 இடங்கள் முன்னேறி தற்போது 43 ஆவது இடத்தினை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, டி-20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தென்னாபிரிக்க அணி வீரரான தப்ரைஸ் சம்ஷி முதலிடத்தில் இருக்கின்றார்.
இதுதவிர ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் முதலிடத்திலும் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் ட்ரெண்ட் போல்ட் முதலிடத்திலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.