
வடக்கு, கிழக்கு சங்கங்களின் ஆதரவுடன் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (புட்போல் ஸ்ரீலங்கா) புதிய தலைவராக ஜஸ்வர் உமர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அடுத்த 4 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் இரண்டு தடவைகள் ஒத்தி வைப்பின் பின்னர் இன்று (30) நடைபெற்றது.
இதன்படி, புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு இன்று காலி, கண்டி, பொலன்னறுவை ஆகிய இடங்களில் நடைபெற்றன. இந்த மூன்று இடங்களிலும் நடைபெற்ற வாக்கெடுப்பில் 62 லீக்குகளைச் சேர்ந்த 186 பிரதிநிதிகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இம்முறை தேர்தலில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் ஜஸ்வர் உமர் மற்றும் களுத்துறை கால்பந்தாட்ட லீக் தலைவர் வைத்தியர் வேர்னன் மணில் பெர்னாண்டோ ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
எனவே, பலத்த போட்டிக்கு மத்தியில் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜஸ்வர் உமர் 96 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். மணில் பெர்னாண்டோவால் 90 வாக்குகளையே பெற்றுக் கொள்ள முடிந்தது.
அதையடுத்து ஏனைய பதவிகளுக்கான போட்டியிலிருந்து வாபஸ் பெறுவதாக மணில் பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர் அறிவித்தனர்.
இதனால், அப்பதவிகளுக்கு ஜஸ்வர் உமர் அணியினர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
இதேநேரம், குறித்த தேர்தலில் ஜஸ்வர் உமருக்கு கிடைத்த மேலதிக 6 வாக்குகளும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கால்பந்து சங்கங்களில் இருந்து கிடைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.