Photo: ICC Twitter
இலங்கை அணிக்கெதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவிய இலங்கை அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி செஸ்டர்-லே-ஸ்ரிட் மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி ஆரம்பம் முதலே தடுமாறியது.
அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா (73), வனிந்து ஹஸரங்க (54), சாமிக கருணாரத்ன (19) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ஓட்டங்களை எடுத்தனர். எஞ்சிய 8 வீரர்களும் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர்.
இதனால், இலங்கை அணி 42.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு சார்பில் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 186 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் அரைச் சதத்தின் உதவியால் 34.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 189 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டியது
இலங்கை அணியின் பந்து வீச்சு சார்பில் துஷ்மன்த சமீர 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகன் விருதினை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் பெற்றுக் கொண்டார்.
இரு அணிகளும் பங்கேற்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை லண்டனில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.