July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம் ஐக்கிய அரபு இராச்சியம், ஓமானில் நடைபெறும்: ஐ.சி.சி அறிவிப்பு

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் டி-20 உலகக் கிண்ணம் நடைபெறும் என ஐ.சி.சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடைபெற இருந்த டி-20 உலகக் கிண்ணம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால் இந்த ஆண்டு இந்தியாவில் நடத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்த டி-20 உலகக் கிண்ணம் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

எது எவ்வாறாயினும், இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் டி-20 உலகக் கிண்ணத்தை நடத்துவது குறித்து ஜூன் 28 ஆம் திகதிக்குள் தெரிவிக்கும்படி ஐ.சி.சி அறிவுறுத்தி இருந்தது.

எனவே அதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில், உலகக் கிண்ணத்தை வேறொரு நாட்டில் நடத்த தங்களுக்கு ஆட்சேபனை எதுவும் கிடையாது என்று பி.சி.சி.ஐ அறிவித்தது.

இதனையடுத்து, டி-20 உலகக் கிண்ணத் தொடர் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும், அக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 14 ஆம் திகதிவரை போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால் டி-20 உலகக் கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்படும் என இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சவுரவ் கங்குலி நேற்று (28) அறிவித்தார்.

இதனிடையே, டி-20 உலகக் கிண்ணம் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் அக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை நடைபெறும் என ஐ.சி.சி இன்று (29) அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இப் போட்டிகளை முன்னின்று நடத்தும் உரிமைத்துவம் இந்திய கிரிக்கெட் சபைக்கே இருக்கும்.

இதன்படி, எட்டு தகுதிகாண் நாடுகள் பங்குபற்றும் முதலாம் சுற்று கிரிக்கெட் போட்டிகள் ஓமானிலும், ஐக்கிய அரபு இராச்சியத்திலும் அக்டோபர் 17 ஆம் திகதியிலிருந்து 23 ஆம் திகதிவரை நடத்தப்படும்.

தகுதிகாண் சுற்றில் இலங்கை, அயர்லாந்து, ஓமான், பப்புவா நியூ கினி ஆகிய அணிகள் ‘ஏ’ குழுவிலும் பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து, நமீபியா ஆகியன ‘பி’ குழுவிலும் விளையாடும்.

தகுதிகாண் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களை பெறும் 4 நாடுகள் பிரதான சுற்றான சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதி பெறும்.

சுப்பர் 12 சுற்றில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகியவற்றுடன் 2 தகுதிகாண் அணிகள் முதலாம் குழுவில் இணையும்.

ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா ஆகியவற்றுடன் மேலும் 2 தகுதிகாண் அணிகள் இரண்டாம் குழுவில் இணையும்.

சுப்பர் 12 சுற்று அக்டோபர் 24 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 8 ஆம் திகதி நிறைவு பெறும். அதனைத் தொடர்ந்து நவம்பர் 11, 12ஆம் திகதிகளில் அரை இறுதிப் போட்டிகளும், 14 ஆம் திகதி இறுதிப் போட்டியும் நடைபெறும்.

இதேவேளை, டி-20 உலகக் கிண்ணத்துக்கான போட்டி அட்டவணையை ஐ.சி.சி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.