July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை வீரர்கள் நடந்து கொண்ட விதம் கவலையளிக்கிறது’

பல மில்லியன் ரூபா பணத்தை செலவழித்து வீரர்களை பாதுகாப்பாக இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தும், அவர்களில் ஒரு சிலர் நடந்து கொண்ட விதம் மிகவும் கவலையளிப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முகாமைத்துவ குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி, இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்ற நிலையில், குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகிய மூவரும் கொவிட்-19  பாதுகாப்பு வலய விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் வெளியே நடமாடியமை தொடர்பான காணொளி சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியது.

இதனையடுத்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் சபை, குறித்த மூன்று வீரர்களுக்கும் எதிராக தற்காலிக போட்டித் தடை விதித்து அவர்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பி அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர்களின் இந்த மோசமான செயல்பாடு குறித்து பேராசிரியர் அர்ஜுன டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,

இங்கிலாந்தில் எமது வீரர்களுக்கு ஒருசில தளர்வுகள் மாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகாமையில் ஒரு கால்வாய் ஒன்று உள்ளது. மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் காலை அல்லது மாலை வேளையில் அங்கு நடந்து செல்ல முடியும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியிருந்தது.

அதேபோல,அந்தப் பாலத்தின் ஊடாக நடந்து சென்றால் பிரதான நகரத்துக்குள் செல்ல முடியும். இதில் இலங்கை அணி வீரர்களுக்கு வெளியில் சென்று உடற்பயிற்சிகளை மேற்கொள்ள அல்லது ஓய்வு நேரத்தைக் கழிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆரம்பத்தில் இலங்கை கிரிக்கெட் அணியுடன் உடற்கூற்று நிபுணர் ஒருவர் மாத்திரம் இருந்தார். வைத்தியர் ஒருவர் அணியில் இருக்கவில்லை. தற்போது 24 மணித்தியாலமும் அணியுடன் வைத்தியர் ஒருவர் இருப்பார். இதில் குறித்த சம்பவம் நடந்த போது இலங்கை அணியின் வைத்தியர் எங்கே இருந்தார் என ஒருவர் என்னிடம் கேட்டார். அதற்கு வைத்தியர் தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறி விட்டார்.

உண்மையில் அணியில் உள்ள வைத்தியரின் வேலை வீரர்கள் இரவு நேரத்தில் தூங்குவதை பார்ப்பது அல்ல. எனவே இவ்வாறான சூழ்நிலையில் வெளியே செல்ல முடியாது என்பதை வீரர்கள் நன்கு அறிவார்கள்.

அதேபோல, அவர்களை இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்க 69 மில்லியன் ரூபா பணத்தை இலங்கை கிரிக்கெட் சபை செலவிட்டுள்ளது. அதில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானத்தின் மூலம் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தோம்.

அதுமாத்திரமன்றி, இந்திய வீரர்களுக்கு முன் நாங்கள் எமது வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினோம். அதுதான் எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. நான் ஒருபோதும் வீரர்களை விமர்சிக்க மாட்டேன். நான் எப்போதும் வீரர்களுடன் அன்பாக இருப்பேன் என அவர் தெரிவித்தார்.