October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய மூன்று இலங்கை வீரர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

கொவிட்-19 பாதுகாப்பு உயிர்க்குமிழி விதிமுறைகளை மீறியதாக இலங்கை அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் நாடு திரும்பினர்.

இதனையடுத்து குறித்த 3 வீர்ரகளையும் நீர்கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை அணி, இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், குறித்த மூவரும் கொவிட்-19 கட்டுப்பாட்டு வலய விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் வெளியே நடமாடியமை தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதனையடுத்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் சபை, குறித்த மூன்று வீரர்களுக்கும் எதிராக தற்காலிக போட்டித்தடை விதித்து அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.

அத்துடன், விசாரணைகள் நிறைவடையும் வரை தற்காலிக போட்டித் தடை விதிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், இன்று (29) பிற்பகல் நாடு திரும்பிய குறித்த 3 வீரர்களும் நீர்கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தனிமைப்படுத்தலுக்காக செலவிடப்படவுள்ள பணத்தை குறித்த 3 வீரர்களிடம் இருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.