
இந்தியாவின் பாட்டியாலாவில் நடைபெற்று வருகின்ற 60 ஆவது இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தேசிய மெய்வல்லுனர் போட்டியில் நேற்று (28) நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் காலிங்க குமாரகே தங்கப் பதக்கம் வென்றார்.
இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய காலிங்க, போட்டியை 45.73 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றார்.
400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தனது அதி சிறந்த காலத்தை பதிவு செய்த அவர், 400 மீட்டர் போட்டிகள் வரலாற்றில் இலங்கை வீரரொருவரினால் பதிவு செய்யப்பட்ட நான்காவது அதி சிறந்த காலமாகவும் இது இடம்பிடித்தது.
இதனிடையே, இந்தியாவின் ஹரியானாவை சேர்ந்த விக்ரன்த் 46.83 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். அத்துடன், டெல்லி வீரரான சர்தாக் (47.25 செக்.) வெண்கல பதக்கத்தை பெற்றார்.
இதனிடையே, பெண்களுக்கான 400 மீட்டர் இறுதிப் போட்டியில் பங்கு கொண்ட இலங்கை வீராங்கனை நதீஷா ராமநாயக்க, நான்காவது இடத்தை பெற்று ஏமாற்றம் அளித்தார். குறித்த போட்டியை 54.37 செக்கன்களில் அவர் நிறைவு செய்தார்.
இந்தப் போட்டித் தொடரில் இதுவரை இலங்கை அணி ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கம் என நான்கு பதக்கங்களை வென்றுள்ளது.
இதில் லக்ஷிகா சுகன்தி (வெண்கலம் – 100 மீ. சட்டவேலி ஓட்டம்), அமாஷா டி சில்வா (வெள்ளி – 100 மீட்டர்) நிமாலி லியனா ஆராச்சி (வெண்கலம் – 800 மீட்டர்) ஆகியோரை தொடர்ந்து காலிங்கவுக்கு 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.