February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“வரம்புகளை மீறும் கிரிக்கெட் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்”; அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ

வரம்புகளை மீறும் கிரிக்கெட் வீரர்கள் மீது கிரிக்கெட் நிறுவனம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (27) இரவு இங்கிலாந்தின் டர்ஹமில் உள்ள வீதிகளில் சுற்றித் திரிவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.

இதையடுத்து குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகிய மூவரும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

 

இது குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்‌ஷ, நாட்டிற்காக ஒரு நோக்கத்திற்காக விளையாடாது, ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவதை சகித்துக்கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

அத்தோடு, “நம் நாட்டு கிரிக்கெட்டை மீண்டும் வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பையும் நேரத்தையும் முதலீடு செய்யலாம்” என நாமல் ராஜபக்‌ஷ தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கிரிக்கெட் வீரர்கள் உயிர்க்குமிழி (பயோ பபுள்) மற்றும் ஹோட்டல் ஊரடங்கு உத்தரவை மீறியுள்ளார்களா என்பதை அறிய இலங்கை கிரிக்கெட் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.